இந்தியா

அரசு மருத்துவமனையின் தரையை சுத்தம் செய்த நோயாளியின் தாய் - இணையத்தில் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட நபர் ஒருவர், தனது 58 வயது தாயுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் தாய், மருத்துவமனையின் தரையை சுத்தம் செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் கடந்த வாரம் சிமரியா கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று போக்கால் அவதிப்பட்டு உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உள்நோயாளிகள் பிரிவில் அனுமதி

இதையடுத்து மருத்துவமனைக்கு தனது 58 வயது தாய் ஹல்கி பாய்-யுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் தனது மகனை கவனித்து கொண்டிருந்த தாயிடம், தரையை சுத்தம்செய்யும்படி செவிலியர் ஒருவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

தரையை சுத்தம் செய்யும் தாய்

மேலும் செவிலியர் ஒரு துணியை கொடுத்து மருத்துவமனையின் வார்டு தரையை துடைக்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து 58 வயதான ஹல்கி, மருத்துவமனையை ஒரு துணியால் சுத்தம் செய்வதும், அங்கிருந்த நாற்காலிகளை துடைப்பதும் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கண்டனம்

இந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, காங்கிரஸ் மாநில தலைவர் ஜிது பட்வாரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பற்றாக்குறையா அல்லது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஊழலால் வீணாகிறதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூறினார்.

மருத்துவமனை நிர்வாகம் பதில்

இந்த நிலையில் மருத்துவமனையின் சர்ச்சைக்குரிய காணொளிக்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், பணியில் இருந்த செவிலியர், துப்புரவு நிறுவனம் மற்றும் மருத்துவமனை உதவி மேலாளர் ஆகியோர்களுக்கு விளக்கம் கேட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் 52 துப்புரவு பணியாளர்களும், மூன்று மேற்பார்வையாளர்களும் உள்ளதாகவும், விசாரணைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT