தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை வருகிற 23-ந்தேதி கூட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்தது.
அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா என்பதால், 3-ல் இரு பங்கு பெரும்பான்மை தேவை. அந்த பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா தோல்வி அடைந்தது.
அப்போது நாடாளுமன்றத்தில் 528 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று இருந்தனர். இதில் பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவை. ஆனால் 298 வாக்குகளே ஆதரவாக கிடைத்து இருந்தன. இதனால் மசோதா தோல்வி அடைந்தது.
ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளன. அன்று ஆளுங்கட்சிக்கு எதிராக இருந்த வாக்குகள் பல தற்போது ஆதரவாக திரும்பி உள்ளன. மேலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில கட்சிகள் வெளிநடப்பு செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
எனவே தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
15 முதல் 18 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெறும் என ஆளுங்கட்சி நம்பிக்கை தெரிவித்து இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த முறை இதற்காக சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டதைப் போல இந்த முறையும் வருகிற 20-ந்தே திக்கு பிறகு, அனேகமாக 23-ந் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகத்தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 91 நாட்கள் ஆகியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை என தெரிகிறது. எதிர்க்கட்சிகள் இதனை குற்றச்சாட்டாக தெரிவித்திருந்தன.
543 உறுப்பினர் பலம் கொண்ட மக்களவையில் தற்போது 3 உறுப்பினர்களின் பதவியிடம் காலியாக உள்ளது. மீதமுள்ள எண்ணிக்கையில் 3-ல் இரு பங்கு பெரும்பான்மைக்காக 361 வாக்குகள் தேவைப்படும். ஆனால் ஆளும் கட்சி தரப்பு இதையும் தாண்டி வாக்குகளை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான முன்னறிவிப்புக்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவை. ஆனால், ஏற்கனவே நடந்த கூட்டத்தொடரின் நீட்டிப்பாக, இதுபோன்ற சிறப்பு கூட்டத்தொடரை 3 நாட்கள் முன்னதாக அறிவித்தால் போதுமானது.
எனவே 16 அல்லது 17-ந் தேதி சிறப்புக் கூட்டத்தொடருக்கான தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.
மக்களவைத் தொகுதிகள் குறையக்கூடும் என தென் மாநிலங்கள் கவலை தெரிவித்து இருந்த நிலை யில், "அப்படி குறைய வாய்ப்பில்லை. இருக்கிற தொகுதிகளை விட 50 சதவீதம் அதிகரிக்கவே செய் யும்" என மத்திய அரசு தரப்பில் உறுதிபட தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை அதிகபட் சமாக 850 வரை அதிகரிக்கும். அதன் அடிப்படையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மாநிலங்களிடையிலான தொகுதி விகிதாச்சாரம் மாற்றமின்றி நீடிக்க புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் இன்னும் இறுதித்தன்மை எட்டப்படவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.