நடப்பாண்டு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை.20ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த ஆக.13ம் தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இவற்றில் 12 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறியது. எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா மட்டும் பரிசீலனைக்காக இரு கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்டு கிட்டதட்ட 10 நாட்கள் ஆகியும் மழைக்கால கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக குடியரசுத் தலைவரால் முடித்து வைக்கப்படவில்லை.
இந்நிலையில் தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே இந்த தாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:-
தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை ஒரு சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக தேடிக் கொண்டு இருக்கிறாரா?
மக்களவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படுவதற்கும் இடையிலான கால இடைவெளி பொதுவாக 2 முதல் 4 நாட்கள் வரை இருக்கும்.
இந்த மக்களவை ஒத்தி வைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அது முடித்து வைக்கப்பட்டது குறித்த எந்த தகவலும் இன்னும் இல்லை.” என்று கூறியுள்ளார்.