இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

5 மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குப் பிறகு தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் கூட இருப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சி இரண்டாக உடைந்தது உள்ளிட்ட பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் கூட்டத்தொடர் கூட உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நேற்று ஜந்தர்மந்தரில் இருந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை வெளியேற்றிய விவகாரம் பற்றி அனைத்து எதிர்கட்சியினரும் பேச இருக்கிறார்கள்.

மேலும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரமும் இன்றைய கூட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் தானாகவே முதல் மந்திரி, பிரதமர் பதவி பறிபோகும் மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதாக்கள் அரசியல் அமைப்பு மசோதாக்கள் என்பதால் இவற்றில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.