இந்தியா

இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய 'மெலோடி டிராமிசு' அறிமுகம்!

'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என வைரலான மீம்ஸ்...

சமீபத்தில் இணையதளத்தில் வைரலான பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் 'மெலோடி' தருணங்களை குறிக்கும் வகையில், பார்லே நிறுவனம் தனது புகழ்பெற்ற மெலோடி டாப்பியில் ஒரு புதிய சுவை கொண்ட சாக்லேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

'மெலோடி டிராமிசு' என்ற பெயரில் வந்துள்ள இந்த சாக்லேட் பாக்கெட்டில் 'இந்தியா - இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மெலோடியின் பின்னணி

கடந்த மே மாதம் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கினார்.

இந்த பரிசைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மெலோனி, 'பிரதமர் மோடி தங்களுக்கு மிகவும் சுவையான மெலடி சாக்லேட்டை பரிசாக தந்துள்ளார்' என்று நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி டிரெண்டிங்காக மாறியது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இவர்களது நட்பை இருவரின் பெயரையும் இணைத்து 'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்போது அது உண்மையாகவே ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது.

'மெலடி டிராமிசு'

இத்தாலியின் புகழ்பெற்ற காபி கலந்த இனிப்பு வகையான 'டிராமிசு' சுவையில் இந்த புதிய மெலோடி தயாரிக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டின் முகப்பிலேயே இந்தியா - இத்தாலி நாட்டின் நட்புறவை போற்றும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு சாதாரண மிட்டாய், சர்வதேச ராஜதந்திர உறவின் அடையாளமாக மாறியுள்ளது.

எங்கே, எப்படி வாங்கலாம்?

இந்த சாக்லேட், விரைவுப் பொருள் விநியோக தளம் ஒன்றில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது. வேறு எந்த கடைகளிலும் தற்போதைக்கு கிடைக்காது.

180 கிராம் எடையுள்ள பாக்கெட்டாக, காபி கேண்டி பிரிவின் கீழ் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாக்லேட் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு லிமிடெட் எடிஷன் தயாரிப்பாகும்.