உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.
ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பப்பு யாதவ் எம்.பி. காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் நன்கொடை பெறுவதாகவும், ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்று உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் நடித்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.