இந்தியா

VIDEO: கொல்கத்தாவில் பரபரப்பு: துர்கா பூஜை பந்தலில் கூட்டநெரிசல் - 17 பேர் உயிரிழப்பு என அச்சம் - 25 பேர் காயம்

மக்கள் துர்கா பூஜாவுக்காக கூடியிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 25 பேர் காயமடைந்தனர்.

வடக்கு கொல்கத்தாவில் முக்தா ராம் பாபு தெருவில் உள்ள சோர்பகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் இன்று மாலை மக்கள் கூடியிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பலர் மயங்கி விழுந்தனர். இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.

மீட்பு

தகவலறிந்து கொல்கத்தா காவல்துறையினர், மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு குழுக்களுடன் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கூட்டநெரிசல் ஏற்பட்டது எப்படி?

மக்கள் துர்கா பூஜாவுக்காக கூடியிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியதால் பந்தலுக்கு வெளியே காத்திருந்த கூட்டம் உள்ளே முண்டியடித்து சென்றதால் சிலர் சாலையில் விழுந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது என ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

மேலும், பூஜை பந்தலின் வெளியேறும் வாயிலில் இருந்த கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் சுவேந்து

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, பாஜக மாநிலத் தலைவர் மற்றும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

காயமடைந்தவர்களுக்கு மிகச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பூஜை ஏற்பாட்டாளர்

பூஜை ஏற்பாட்டாளர் விகாஸ் தாஸ் செய்தியாளர்களிடம், "இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. இப்போது எங்களின் முழு கவனமும் மீட்புப் பணிகளில்தான் உள்ளது.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதே எங்களின் முக்கியப் பணியாகும்" என்று கூறினார்.

மம்தா பானர்ஜி

பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த செய்தியை கேட்டு தான் மிகவும் அதிர்ச்சியுமும் வருத்தமும் அடைந்ததாக முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் வலிமையையும் தைரியத்தையும் பெறவும் துர்கா தேவியை நான் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமித் ஷா துர்கா பூஜைக்காக அமித் ஷா கொல்கத்தா வந்தடைந்தார். அவர், சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT