ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் பகுதியில் சாலையோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பிற்கு உணவு விஷம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பானி பூரி விற்பனையாளர் தலைமறைவானதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 18 நோயாளிகளின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விசாரணை அறிக்கைகள் கிடைத்த பிறகு சரியான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் சிவில் சர்ஜன் டாக்டர் பச்சா பிரசாத் சிங் கூறினார்.