இந்தியா

சிந்து நதிநீர் தொடர்பாக ஐ.நா.விற்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான்- இந்தியா எதிர்ப்பு

இந்தியாவின் இறையாண்மை மீது நடுவர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி, அதன் தீர்ப்பை இந்தியா நிராகரித்தது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான நடுவர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து, ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் அனுப்பிய கடிதத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம்

இந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தடை செய்யப்படும் என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்தியது.

நடுவர் நீதிமன்றம்

இதையடுத்து ஆகஸ்ட் 31 அன்று, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகவும், இந்தியா தன்னிச்சையாக அதை நிறுத்தி வைக்க முடியாது என்றும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து நடுவர் நீதிமன்றம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டது என்றும், அதற்கு இந்தியாவின் இறையாண்மை முடிவின் மீது அதிகார வரம்பு இல்லை என்றும் கூறி, இந்தியா உடனடியாக அந்த தீர்ப்பை நிராகரித்தது.

பயங்கரவாதி மசூத் அசார்

இதற்கிடையில் பிரான்சில் நடைபெறவிருந்த நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுமையான கூட்டத்திற்கு (Financial Action Task Force) சில வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தனது மிகவும் தேடப்படும் பயங்கரவாத பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாருக்கான வெகுமதியை 20 லட்சம் ரூபாயில் இருந்து, 70 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.

பயங்கரவாதி மசூத் அசார், 2001 நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் 2019 பிப்ரவரி நடந்த புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தாக்குதல்கள் தொடர்பாக இந்தியாவில் தேடப்பட்டு வருகிறார்.

இதையடுத்து பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை, தந்திரம் என்றும் ஒரு போலி அறிவிப்பு என்றும் நிராகரித்து, பயங்கரவாதிக்கு எதிரான உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், பயங்கரவாதி அசார், தங்கள் நாட்டில் தற்போது இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் கூறியது.

இந்தியா எதிர்ப்பு

இருப்பினும் இந்த தகவலை இந்தியா நிராகரித்தது; கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் பயங்கரவாதி அசார், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷாவில் இருப்பதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில் சிந்து நதி நீர் தொடர்பாக சர்வதேச நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தான் தனது தீய பிரசாரத்திற்காக உண்மைகளை திரித்துக் கூறுவதையும், பொய்களை பரப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

முதலாவதாக, பாகிஸ்தான் அமைச்சர் சித்தரிக்க முயல்வது போல, இந்த தீர்ப்பு நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல; மாறாக, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

உண்மையைத் திரித்து கூறுவதற்கான பாகிஸ்தானின் மற்றுமொரு முயற்சியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, அதனை நாங்கள் பலமுறை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்.

பாகிஸ்தான் தனது செயலையும் உறுதியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அது சொல்வதை செய்யும் என்று உலகம் நம்புவதற்கு முன்பாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான நடவடிக்கையை அது எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT