இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பிரிவினைக்கு காரணமாக காங்கிரஸ் இருந்தது என்றும், நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால், இந்தியா பிரிவினையை சந்தித்திருக்காது என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ‘பிரிவினை கொடுமைகள் நினைவு நாள்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “சுதந்திரத்தின் போது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், நாட்டிற்கு தீங்கு விளைவிக்க யாரும் துணிந்திருக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் பிரிவினைய எதிர்த்து துணிந்து போராட தவறியதால், நாடு ஒரு பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது. பஞ்சாபிலோ அல்லது வங்காளத்திலோ பாகிஸ்தான் ஒருபோதும் கேட்காத நிலம் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பாகிஸ்தான் மாகாணமான சிந்துவில் ஒரு காலத்தில் சிந்துக்களும் இந்துக்களும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால், அது வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் பஞ்சாபிகளும் வங்காளிகளும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் அந்த பகுதிகளும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
நமது நாடு காங்கிரஸை நம்பியது. ஆனால் காங்கிரஸ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.
1947-ல் பிரிவினையின்போது மெளனம் காத்தவர்கள், இன்றும் அதே மனப்பான்மையை கொண்டிருக்கின்றனர்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மவுனம் காத்து வருகின்றனர்.
தங்களுக்கு வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமே தங்களின் முன்னுரிமை என்பதால், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் எதிர்காலத்திலும் அமைதியாகவே இருக்கும்” என்று அவர் கூறினார்.