கொல்கத்தா:
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் கமிஷன், இம்மாநிலங்களின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில் மேற்கு வங்காள தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடவும் தடை விதித்துள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு, அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது நிர்வாக ரீதியான நடவடிக்கையாக தெரியவில்லை. அரசியலமைப்பு மீதான நேரடி தாக்குதலாகவே இருக்கிறது என்றும், இது, அதிகபட்ச அரசியல் தலையீடு என்றும் தேர்தல் ஆணையத்தை அவர், கடுமையாக சாடி உள்ளார்.
மேலும், 'தேர்தல் கமிஷன் மேற்கு வங்காளத்தை மட்டும் தனித்து தேர்ந் தெடுத்து குறிவைப்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மிகவும் கவலைக்குரியதாகவும் உள்ளது.
50-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி. தன்னிச்சையாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகளில் முரண்பாடுகள் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பதவியில் இருந்து நீக்கிய அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக கமிஷன் நியமித்துள்ளது.
ஒவ்வொரு அதிகாரியுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் நான் முழுமையாக துணை நிற்பேன். மேற்கு வங்காளம் மிரட்டல்களுக்கு ஒருபோதும் பணிந்ததில்லை; இனியும் அடி பணியாது. பா.ஜனதா ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது?. மேற்கு வங்காளத்தையும், அதன் மக்களையும் ஏன் இப்படி இடைவிடாமல் குறிவைக்கிறது?.
சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் கடந்த பிறகும், குடிமக்களை வரிசையில் நிற்க வைத்து தங்கள் குடியுரிமையை நிரூபிக்க செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன மனநிறைவு கிடைக்கிறது?' என்றும் கூறி உள்ளார்.