இந்தியா

Women Reservation | மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்... காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை விவாதிக்கவுள்ளன.

2029 மக்களவைத் தேர்தல் முதல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா குறித்து, நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

'நாரி சக்தி வந்தன் அதினியம்' (Nari Shakti Vandan Adhiniyam) சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மற்றும் தொகுதி மறுவரையறை (delimitation) குறித்த அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீதான தங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தில் விவாதிக்கவுள்ளன.

பெண்கள் இடஒதுக்கீடு, தேசிய அளவிலான தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என மூன்று தனித்தனி விவகாரங்கள் இருப்பதாகவும், மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசு இவற்றை "வேண்டுமென்றே ஒன்றோடொன்று கலப்பதாக" எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் அவை தலைவர்கள் பங்கேற்கும் தனி ஒரு கூட்டமும் நடைபெறும் என்று தெரிகிறது. கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்து வரும் நிலையில், எந்த கட்சி என்ன கூறுகிறது என்பது தொடர்பான அரசியலுக்குள் தான் நுழையப்போவதில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.