பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றார். பனஸ்கந்தாவில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதோடு விவசாயிகளுக்கு 24-வது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடியை விடுவித்தார். மேலும், 2 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.
2-வது நாளான இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து ஏக்தா நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா மற்றும் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ.307.83 கோடி மதிப்பிலான 23 வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். மேலும், ரூ.118.88 கோடி மதிப்பிலான 8 வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் மொத்தம் 31 திட்டங்களுக்கான முதலீட்டு மதிப்பு ரூ.426.71 கோடியாகும். தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் உலகில் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதி களை மேம்படுத்துவதையும், அந்த பகுதியின் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களில் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் ஓட்டல், ரூ.16 கோடி மதிப்பிலான ‘ஏக்தா குரூஸ்’, ரூ.14.30 கோடி மதிப்பிலான ‘ரெயின் பாரஸ்ட் அம்சம்’ மற்றும் ரூ.3.67 கோடி மதிப்பிலான ஈகோ-டிரெயில் அடங்கும்.
உள்கட்டமைப்பு பொறுத் தவரை ரூ.45.53 கோடி செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.21.40 கோடி மதிப்பிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.23.81 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அணிவகுப்பு பாதை ஆகியவை அடங்கும்.
குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில் நடந்த ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டிற்கு எதிராக நகர்ப்புற நக்சல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாட்டை பிளவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன.
வெளிப்புற சவாலுக்கு நாம் தீர்வு தேடிய வேளையில் நாட்டில் உள்ள சில சக்திகள் பொய், வதந்தியை பரப்பிக்கொண்டிருந்தன.
ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு மாறாக தனது கடமையைக் கைவிட்ட எதிர்க்கட்சி தடைகளை உருவாக்கும் சக்தியாக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.