ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் பீகார் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர். அவர்களில் 3,357 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் காணாமல் போன, கடத்தப்பட்ட மற்றும் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளை கண்டறிந்து மீட்பதற்காக மாநிலம் தழுவிய அளவில் ஆபரேஷன் தலாஷ் மேற்கொள்ளப்படுகிறது.
பீகார் சிஐடி பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் கே. சுஹிதா அனுபமின் வழிகாட்டுதலின் ஆகஸ்ட் 20 தொடங்கிய இந்த ஆபரேஷன் செப்டம்பர் 10 வரை நடைபெறுகிறது.
இந்தத் தேடுதல் வேட்டையில் சிறார்களுக்கான சிறப்பு சிறப்பு காவல் பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல உதவி மையங்கள், மனித கடத்தல் தடுப்புப் பிரிவுகள், மற்றும் 'போலீஸ் தீதி', 'அபயா பிரிகேட்' போன்ற பெண் காவலர்களின் சிறப்பு படைகள் ஒருங்கிணைந்து இந்த ஆபரேஷனை மேற்கொள்கின்றன.
ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 2 வரை மொத்தம் 14 நாட்களில் மட்டும் மொத்தம் 3,359 குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 3,357 குழந்தைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில் 2,705 பேர் சிறுமிகள் மற்றும் 652 பேர் சிறுவர்கள் ஆவர். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இதில் மிக அதிகமாக உள்ளது கவனிக்கத்தக்கது.
14 நாட்களில் 'மிஷன் வாத்சல்யா' என்ற இணையதளத்தில் புதிதாக 2,254 குழந்தைகளின் விவரங்கள் பதிவேற்றப்பட்டன.
அதில் ஏற்கனவே இருந்த பதிவுகளுடன் ஒப்பிட்டு 2,787 குழந்தைகளின் விவரங்கள் துல்லியமாகப் பொருத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன.
பீகார் காவல்துறையின் அறிக்கையின்படி, 'மிஷன் வாத்சல்யா' இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 6,857 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆபரேஷன் வெறும் காவல் நிலையப் பதிவுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சிறுவர் நீதி வாரியங்களின் அனுமதியுடன் குழந்தைகள் காப்பகங்கள், சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் சிறார் இல்லங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள குழந்தைகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி, அவர்களின் குடும்பப் பின்னணியைக் கண்டறிந்து வருகின்றனர்.
மேலும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் காவல்துறையினர் இந்த ஆபரேஷனின் கீழ் தீவிரமாக மறுவிசாரணை செய்து வருகின்றனர்.