டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து CJP சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவின் கீழ் 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் தீப்கே பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "அவதூறுகளால் எதுவும் மாறப்போவதில்லை.
மாணவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளில் இழுப்பதோ அல்லது சமூகத்தில் அவர்களைத் துன்புறுத்துவதோ எந்தத் தீர்வையும் தராது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன்... வழிதவறிய மாணவர்களுக்கு நல்வழி காட்டுவோம்" என்று பிரதமர் கூறினார்.
பிரதமரின் இந்த வீடியோ பதிவின் கீழ் கருத்துத் தெரிவித்த CJP நிறுவனர் அபிஜீத் தீப்கே, "ரீலில் மட்டும் மன்னிப்பீர்களா அல்லது மாணவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெறுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்தம் தொடர்பாகப் பிரதமர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், "நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் முகப் பொலிவு பிரகாசமாக இருக்கிறது" என்று தீப்கே கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமருக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நோய்டாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி மீது 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யப்பட்டது. வழக்கு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி ஒரு வீடியோ வெளியிட்டு, "இது எனது முதல் மற்றும் கடைசித் தவறு.
சூழ்நிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்" என மன்னிப்புக் கோரினார். சிறுமி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஐ.டி விங் உறுப்பினர்கள் மீது இதுபோன்ற அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படாதது ஏன் என்று CJP கேள்வி எழுப்பியது.
போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் சில வழக்குகளைத் திரும்பப் பெற்று வருகின்றன. இருப்பினும், வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என CJP வலியுறுத்தி வருகிறது.