ஒடிசாவின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலின் கிராண்ட் ரோடு பகுதியில் தேரை இழுப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பக்தர் உயிரிழந்துள்ளார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் தற்போது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை, முதலமைச்சர் மோகன் சரண் மாஜி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ததோடு, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 13 ஆயிரம் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஒடிசா காவல் கடல்சார் காவல்நிலையம் ஆகியவை இணைந்து கூட்டாக ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் விரைவு மீட்புக் குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறைப் பணியாளர்கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளனர். கிராண்ட் ரோடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கண்காணிக்க 473 செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்ற ஒரு ஆன்மீகத் திருவிழாவாகும்.
இந்தத் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தின் வளர்பிறை துவிதியை திதியில் (ஜூன் - ஜூலை மாதங்களில்)கோலாகலமாகத் தொடங்குகிறது.
இந்தத் திருவிழாவின் போது, மூலவர்களான ஜெகநாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களும் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.