இந்தியா

கேரளாவில் கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட யானை மிதித்து ஒருவர் பலி!

கேரளாவில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்ட யானை மிதித்து அதனை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் பலி.

கேரள மாநிலம் அங்கமாலி, கிடங்கூர் மஹாவிஷ்ணு கோயில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட வளர்ப்பு யானை, திடீரென மதம்பிடித்து ஆக்ரோஷமான நிலையில், அதனை கட்டுப்படுத்த முயன்ற லாரி ஓட்டுநரை மிதித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதன் தலைமைப் பாகன் உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொல்லம் மாவட்டம் மையநாட்டைச் சேர்ந்த ‘மையநாடு பார்த்தசாரதி’ என்ற வளர்ப்பு யானை அருகிலுள்ள கோயிலில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்ற பிறகு, ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில் திருவிழாவிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

யானையைக் குளிப்பாட்டிவிட்டு கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, திடீரென ஆக்ரோஷமாகி பாகர்களின் கட்டுப்பாட்டை மீறி, அங்கிருந்து ஓட தொடங்கியுள்ளது. அப்போது கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தியுள்ளது. ஒருகாரை பலமுறை கவிழ்த்து முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது.

மிகுந்த ஆக்ரோஷத்தில் இருந்த நிலையில் அங்கு நின்றுக்கொண்டிருந்த மக்களையும் தாக்க முயன்றுள்ளது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, அதனை ஏற்றவந்த லாரி ஓட்டுநர் விஷ்ணு யானையிடம் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

யானையின் பாகன் பிரதீப் உட்பட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யானை லாரி ஓட்டுநரை மிதித்த நிலையில், அவரது உடலுக்கு அருகிலேயே இருந்துள்ளது.

இதனால் அவரை மீட்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வனத்துறையின் விரைவு மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, கால்நடை மருத்துவர் அதற்கு மயக்க மருந்து செலுத்தி அமைதிப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து யானையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் இயல்பாக நிகழ்கின்றன. யானைகளை கோயில் திருவிழாவிற்கு பயன்படுத்துவதில் அம்மாநில உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.