கேரளம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் கேரளம் மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர அர்லேகர் தமிழ்நாடு ஆளுநர் பதவியை கூடுதலாக கவனித்து வந்தார்.
இதனிடையே தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம் செய்யப்பட்டு, கேரளம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டார்.
மேலும் ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தின் முழு நேர ஆளுநராக சென்னை மக்கள் பவனில் நடந்த நிகழ்வில் அர்லேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கேரளம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று (அக்டோபர் 23 -வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரளம் மாநிலம் திருவனந்தபுறத்தில் உள்ள மக்கள் பவனில் நடந்த நிகழ்வில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சௌமென் சென், ஓம் பிரகாஷ் மாத்தூருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கேரளம் முதலமைச்சர் வி.டி. சதீசன் மற்றும் பிற அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஓம் பிரகாஷ் மாத்தூர், ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ஆர்.எஸ்.எஸ் இல் இணைந்து பொது வாழ்வில் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் குஜராத் மாநிலத்திற்கான பாஜக பொதுச் செயலாளராகவும், ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2024 முதல் சிக்கிம் ஆளுநராக செயல்பட்டு வந்த இவர் தற்போது கேரளம் ஆளுநராக பதவியேற்றுள்ளார்.