அரசு அதிகாரிகள் பணிகளை உரிய நேரத்தில் செய்து முடிப்பதற்காக, குடிமக்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு அன்பளிப்போ அல்லது கௌரவ ஊதியமோ வழங்குவதில் “தவறு ஏதும் இல்லை” என கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்ட அமைச்சர் கே.எம். சிவலிங்கே கவுடா தெரிவித்த கருத்து, பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பிரஜாசேவா அந்தோலனா' என்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தின் போது அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார். தனது நிலப் பிரச்சினையை எடுத்துரைப்பதற்காக கூட்டத்தில் கலந்துகொண்ட, மாவட்டத்தின் ஆலூர் தாலுக்காவை சேர்ந்த விவசாயியான புனீத், அமைச்சர் முன்னிலையில் அந்த கருத்தை கண்டித்தார்.
“அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நாம் ஏன் அவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க வேண்டும்? இது லஞ்சத்தை ஊக்குவிப்பது போல் ஆகாதா?” என்று புனீத்தும் ஒரு இளைஞர் குழுவும் அமைச்சரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினர். மேலும் பலர் அவர்களுக்கு ஆதரவளித்ததால், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.
நிலைமை கைமீறி போவதை உணர்ந்த சிவலிங்கே கவுடா, தன்னை தற்காத்து கொள்ள முயன்றார். “அதிகாரிகள் பணம் பறிக்க கூடாது என்றே நான் கூறினேன். நேர்மையான தொழிலாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றே கூறினேன், லஞ்சம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதல்ல,” என்று அவர் கூறினார்.
“தனது வேலையைச் செய்து முடிப்பதற்காக லஞ்சம் கேட்கப்படுவதாக ஒருவர் புகார் அளித்தார். நான் அவரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அதிகாரியை மதிக்க வேண்டும் என்றும் கூறினேன். எனது கூற்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் பின்னர் விளக்கம் அளித்தார்.
துணை ஆணையர் கே.எஸ். லதா குமாரி போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தினார். “அமைச்சரின் அறிக்கை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிகாரிகள் பணிக்காக லஞ்சம் கேட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
பா.ஜ.க. எம்.எல்.சி சி.டி. ரவி , தனது எக்ஸ் தளத்தில், அமைச்சரின் கருத்துக்களை கண்டித்துள்ளார். "யாராவது 10 ரூபாய் லஞ்சம் கேட்டால் கூட, என்னிடம் புகார் செய்யுங்கள்" என்று முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியிருந்ததை ரவி குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது சொந்த அரசாங்கத்தின் அமைச்சர்களே 'மரியாதையுடன் லஞ்சம் கொடுங்கள்' என்கிறார்கள்.
"அமைச்சர் அவர்களே, நீங்கள் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் இயல்பாக இருக்கலாம், ஆனால் கர்நாடக மக்களுக்கு அது பொருந்தாது." அந்த அறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டு, மாநில மக்களிடம் மன்னிப்புக் கேட்குமாறு அமைச்சரை சட்டமன்ற மேலவை உறுப்பினர் வலியுறுத்தினார்.