இந்தியா

இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை - 48 டிகிரி செல்சியஸாக சுட்டெரித்த சூரியன்!

அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்துப் பிற வேலைகளுக்குப் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை.

வட இந்தியா முழுவதும் கடுமையான கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தில் 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்து நாட்டிலேயே மிக வெப்பமான பகுதியாகவும், இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது.

பாந்தா மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் கடுமையான உலர் காற்று காரணமாக, காலை 10 மணிக்கே ஒட்டுமொத்த சந்தைகளும், கடைகளும் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்துப் பிற வேலைகளுக்குப் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி, பாந்தா மாவட்டத்தின் தற்போதைய வெப்பநிலை அதன் வழக்கமான சராசரியை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டது, தீவிர மணல் கொள்ளை மற்றும் வறண்ட பாறைகள் நிறைந்த நிலப்பரப்பே இந்த அதீத வெப்பத்திற்குக் காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் அதிகமாக வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. உத்திர பிரதேசத்தின் பாந்தா (48.2 ), தலைநகர் டெல்லி (45.8°C), மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ (47.4°C) மற்றும் மகாராஷ்டிராவின் வர்தா (47.1°C) ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸை தாண்டி மக்களை வாட்டி வதைத்து எடுக்கிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் அதிக வெப்பம் காணப்பட்டு வருவதால் மக்களுக்கு வெப்ப பக்கவாதம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகள் போன்ற நோய்களால் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் உத்திரபிரதேசத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைத்தும், அவசர மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றனர்.