இந்தியா

10 வருடத்திற்குப் பிறகு கேரள தலைமைச் செயலகத்தின் வடக்கு வாயில் திறப்பு: பினராயி விஜயன் ஆட்சியில் மூடப்பட்டது ஏன்?

கேரள மாநில தலைமைச் செயலகத்தின் வடக்கு வாயில் 10 வருடத்திற்குப் பிறகு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வாகனங்கள் செல்வதற்காக திறக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 வருடத்திற்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

கேரள மாநிலத்தை பொறுத்த வரையில் மக்கள் பிரச்சினைக்காக இடது சாரிகள் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். முதலமைச்சர் மற்றும் அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்தின் முன் கூடி போராட்டம் நடத்துவார்கள்.

தலைமைச் செயலகத்தில் பல்வேறு வாயில்கள் உள்ளன. இதில் வடக்கு வாசலும் ஒன்று. இந்த வாசல் வழியாக செல்லும் பாதையில் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் குறைதீர்க்கும் பிரிவு உள்ளது. இந்த வாயிலை பொதுமக்கள் தலைமைச் செயலகத்திற்கு செல்லும் வழியாக பயன்படுத்தி வந்தனர். இதனால் பாதுகாப்பு காரணம் காட்டி பினராயி விஜயன் தலைமையிலான கடந்த அரசு இந்த வாயிலை மூடியது. பினராயி விஜயன் இரண்டு முறை (10 ஆண்டுகள்) தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்றார். இந்த 10 ஆண்டுகளும் இந்த வாயில் மூடப்பட்டிருந்தது.

நேற்று காங்கிரஸ் தலைவர் சதீசன் கேரள மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இன்று இவரது தலைமையில் புதிய அரசு இன்று பணிகளை தொடங்கியது. இந்த நிலையில் வடக்கு வாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த வாயில் வழியாக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்ளக் கன்டோன்ட்மென்ட் வாயில் வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.