இந்தியா

போர்க்களமான நொய்டா.. ஊதிய உயர்வு கோரி வன்முறையில் இறங்கிய தொழிலாளர்கள் - 'நக்சலிச சதி' என முதல்வர் யோகி சாடல்

ஏற்கனவே அழிந்துவிட்ட நக்சலிசத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் சதித்திட்டம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

போராட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் தலைமையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இன்று (ஏப்ரல் 13) போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

வன்முறை

இதனால் டெல்லி-நொய்டா எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பதற்றம் நிலவுகிறது.

நொய்டாவின் Phase 2 பகுதியில் உள்ள செக்டார் 1 மற்றும் 84 ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தி தீ வைத்து எரித்து, கல்வீச்சில் ஈடுபட்டனர். ஒரு போலீஸ் வேனும் தீக்கிரையாக்கப்பட்டது.

தொழிலாளர்கள் முக்கியச் சாலைகளை முற்றுகையிட்டதால், NH-9 உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்கக் காவல்துறை தடியடி நடத்தியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர டெல்லி மற்றும் நொய்டாவிலிருந்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கைகள்

அண்மையில் பக்கத்துக்கு மாநிலமான அரியானா தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தியுள்ளது.

எங்களுக்கு மட்டும் ஏன் குறைவாக வழங்கப்படுகிறது? என்று கொதித்தெழுந்த உ.பி. ஊழியர்கள்,

குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20,000 ஆக உயர்த்தப்பட வேண்டும், 12 மணிநேர வேலையைத் தவிர்த்து, 8 மணிநேர ஷிப்ட் முறையைக் கொண்டுவர வேண்டும்.

சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கூடுதல் நேர வேலைக்குச் சரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும். முறையான உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நக்சலிசம்

போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தொழில் நிறுவனங்களுடன் தொழிலாளர் துறை பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ஏற்கனவே அழிந்துவிட்ட நக்சலிசத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் சதித்திட்டம் இதில் இருக்கலாம், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.