இந்தியா

Twin fire: நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு, தங்கும் விடுதியில் அடுத்தடுத்து தீ விபத்து

இந்த தீ விபத்து ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், நொய்டாவின் செக்டார் 52இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தொழில்நகரமாக விளங்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரம் டெல்லுக்கு அருகாமையில் உள்ளது.

பல்வேறு வட மாநிலங்களில் இருந்து பலரும் இங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை நொய்டாவின் செக்டார் 74 பகுதியில் உள்ள Ivy County என்ற 28 மாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 8 மணியளவில் குடியிருப்பின் 12வது மாடியில் ஒரு வீட்டின் உள்ளே திடீரெனப் தீப்பிடித்துள்ளது.

தீ வேகமாக பரவ ஜன்னல் வழியே விண்ணை முட்டும் அளவு கரும்புகை வெளியேறியது.

தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு வளாகம் முழுவதும் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

மேல் தளங்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு பல மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அனைத்து குடியிருப்புவாசிகளும் முன்னெச்சரிக்கையாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தில் எவ்வித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

செக்டார் 52

இதனிடையே இந்த தீ விபத்து ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், நொய்டாவின் செக்டார் 52இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு உணவகமும் மேல் தளம் மாணவர்கள் தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு தீவிபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விதத்திலும் உயிரிழப்போ, காயங்களோ ஏற்படவில்லை.

முன்னதாக டெல்லியில் விடுதி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில் நொய்டாவில் ஏற்பட்ட இந்த இரட்டை தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.