இந்தியா

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை’ - உச்ச நீதிமன்றம்

சட்டம் என்பது கால மாற்றத்திற்கேற்ப இயல்பானதாகவும், அதன் போக்கிற்கு ஏற்பவும் அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், 20 வாரங்களுக்குப் பிறகும் தங்களின் தேவையற்ற கருவை கலைக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 30 வார காலக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை ரத்து செய்யக்கோரி எய்ம்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி,

‘இந்தக் கருவைக் கலைத்தால், அது கடுமையான குறைபாடுகளுடன் கூடிய உயிரோடு பிறக்கும் குழந்தையாகத்தான் இருக்கும். சிறுமியான அந்தத் தாய்க்கு இது வாழ்நாள் முழுவதும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும், மீண்டும் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். சிறுமிக்கு வாழ்நாள் முழுவதும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.’ என வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி அமர்வு,

தத்தெடுப்பதற்கு ஏற்கனவே பல குழந்தைகள் உள்ளனர். நம் நாட்டில் நமக்கு நிறைய அனுதாபங்கள் உள்ளன. தெருக்களில் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் பலர் உள்ளனர், அவர்களைச் சுற்றி மாஃபியா கும்பல்களும் (சதி வேலைகளும்) உள்ளன. நாம் அவர்களைக் கவனிக்க வேண்டும். இது 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட தேவையற்ற கர்ப்பம்.

இது ஒரு சீராய்வு மனு. தேவையற்ற கர்ப்பத்தை ஒரு நபர் மீது திணிக்க முடியாது. அவள் ஒரு சிறுமி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவள் இப்போது படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாம் அவளை ஒரு தாயாக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் அந்தச் சிறுமி அனுபவித்த வலியையும், அவமானத்தையும் கற்பனை செய்து பாருங்கள்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் சட்டம் என்பது கால மாற்றத்திற்கேற்ப இயல்பானதாகவும், அதன் போக்கிற்கு ஏற்பவும் அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.