இந்தியா

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது.

கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த மசோதா எந்த வரியையும் அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையும் புதிதாக முன்மொழியவில்லை என தெளிவுப்படுத்தினார்.

“நுகர்வோர் யுபிஐ கட்டணம் ஏதேனும் செலுத்துவார்களா என்றால் இல்லை. யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.

வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 மூன்று முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுமுறைகள் சட்டம், 2007, வருமான வரிச் சட்டம், 2025, நிதிச் சட்டம், 2026 ஆகிய மூன்று பிரிவுகளில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

பணம் செலுத்துதல் சட்டத்தில் திருத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என பயனர்களிடையே அச்சம் எழுந்துவந்தது. இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

எதிர்காலத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அந்த சுமை பொதுமக்கள் மீது விழாது. அது பெரிய வணிகர்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.