உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 34% இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆந்திரப் பிரதேச அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) 34% இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர அரசு இரண்டு அரசாணைகளை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், 1992ம் ஆண்டில் இந்திரா சாஹனி வழக்கின் தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட 50% உச்சவரம்பைத் தாண்டி மொத்த இட ஒதுக்கீட்டை இது உயர்த்துகிறது என்ற அடிப்படையிலும், இடஒதுக்கீடு உச்சவரம்பு மீறப்பட்டதை நியாயப்படுத்த அனுபவப்பூர்வமான தரவுகள் இல்லை எனவும் கூறி ஆந்திர அரசின் அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவுக்கு எதிராக ஆந்திரப் பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.
இதன்போது ஆந்திர அரசு வழங்கிய ஒருங்கிணைந்த குடும்ப கணக்கெடுப்பின் தரவுகள் பொருத்தமற்றவை எனவும், அந்தத் தரவுகளை நம்பகமற்றவை என்று உயர்நீதிமன்றம் நிராகரித்ததற்கு எந்தக் காரணமும் இல்லை என ஆந்திர பிரதேச அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஷீல் நாகு அமர்வு, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் மிகவும் நியாயமான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டது.
மேலும் இட ஒதுக்கீட்டை 34% ஆக நிர்ணயிப்பதற்காக ஆந்திர பிரதேச அரசு அளித்த ஒருங்கிணைந்த குடும்ப கணக்கெடுப்பின் தரவுகள் பொருத்தமற்றவை என்று உயர் நீதிமன்றம் கூறியதில் தவறை காண முடியவில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை மிகவும் நியாயமானது என்றும் கூறி ஆந்திர அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.