கல்வி நிறுவனங்கள் மீது எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றும், இது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டு:
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) பேரணியில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான ஒட்டுமொத்த கல்வி அமைப்பும் ஈடுபட்டுள்ளது என்றும், இதனால் இதுவரை 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "பயிற்சி மையங்கள், தேர்வு மையங்கள், வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், போக்குவரத்து மற்றும் விநியோகஸ்தர்கள் முதல் தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் உயர்மட்டத்தில் உள்ள கல்வி அமைச்சகம் வரை ஒட்டுமொத்த கட்டமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளது.
ஆதிக்கம் கூடாது:
நமது கல்வி நிறுவனங்கள் சுதந்திரமானவையாக இருக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ நமது கல்வி நிறுவனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. துணைவேந்தர்கள் ஒரே அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் தேசிய தேர்வு முகமையின் பொறுப்பாளர் ஒரு அரசியல் அமைப்பை சேர்ந்தவராக இருக்கக்கூடாது.
நாம் வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும். யாரேனும் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால், உடனடியாகக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
உடனடி மறுதேர்வு:
வினாத்தாள் கசிவு ஏற்பட்டால், மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; அத்துடன் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.
மாணவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், நமது தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறையில் நேர்மையை உறுதி செய்வதற்கும் இது கூடிய விரைவில் உறுதி செய்யப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.