மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையல் புர்பா மெதினிபூர் மாவட்டம் ஹல்தியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மேற்கு வங்கத் தேர்தலில் இம்முறை பாஜக வெற்றி பெறாது. திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கும். 2026-ஆம் ஆண்டிலேயே டெல்லியிலிருந்தும் பாஜக-வை நாங்கள் வெளியேற்றுவோம்.
கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கத்தில் விரிவாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இக்காலகட்டத்தில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். பாஜக-வை யாரும் விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் 294 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர் தானே என்று அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அது சாத்தியமாக வேண்டுமென்றால், அவர் முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.