இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக அக்.12ம் தேதி உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியும் சென்றனர்.
இந்நிலையில் “நீதித்துறையை யாராலும் மிரட்ட முடியாது” என இந்தப் பேரணி தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பேரணியின் போது நடந்துகொண்ட விதம் குறித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுத்த விசாரணையில் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அக்டோபர் 12 பேரணியின் போது உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த நிகழ்வுகளின் அனைத்து சிசிடிவி மற்றும் டிஜிட்டல் பதிவுகளைப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியக் கூட்டணியினரின் இந்த பேரணியை எதிர்த்து நான்கு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜுன கார்கே, மஹுவா மொய்த்ரா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து உத்தரவு தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த்.,
“அறிவிப்பு அனுப்புவதால் நாங்கள் எதையும் கண்டிக்கிறோம் என்று அர்த்தமல்ல. ஆனால், அதற்கு முன்பு ஒரு ஆட்சேபனை. அடுத்த விசாரணைத் தேதியில் மனுதாரர்களில் ஒருவரின் நடத்தை குறித்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்," என்று ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் தெரிவித்தார்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மூத்த வழக்கறிஞர் கௌரவ் பாட்டியா, “இந்த நீதிமன்றம் ஒரு அரசியல் ஊர்வலத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது நடந்திருக்கக் கூடாது.” என தெரிவித்தனர்.
அதற்கு.,
“நாங்கள் ஒன்றும் தந்தக் கோபுரத்தில் (Ivory towers) வாழவில்லை; வெளியே அவர்கள் என்ன பேசுகிறார்கள், நீதிமன்றத்திற்குள் என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உச்ச நீதிமன்றத்தை யாராலும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது . நீதித்துறை அவ்வளவு பலவீனமானது அல்ல” என தெரிவித்தார்.