இந்தியா

4-ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

எந்த தலையீடும் தேவையில்லை என்றும், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

விதிகளின் படி தனக்கு நான்காவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்த அரசு ஊழியரின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சசி குமாரி தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதி மஞ்சு ராணி சௌஹான் ஆகஸ்ட் 7-ஆம் தேதியன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேல் முறையீடு:

தனது நான்காவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் (பீம் நகர்) வட்டார கல்வி அலுவலர் ஜூன் 19-ஆம் தேதியன்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பெண் மேல்முறையீடு செய்திருந்தார்.

சட்டத்தின்படி ஆறு மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

விசாரணையின் போது, ​​விதிகளின்படி மனுதாரர் தனது நான்காவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்ற அடிப்படையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அந்த ரிட் மனுவை எதிர்த்தார்.

எனவே, எந்தத் தலையீடும் தேவையில்லை என்றும், இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.

சட்டத்தின் பார்வையில் தவறானது:

குமாரி தனது மற்ற மூன்று குழந்தைகளின் பிறப்பின்போது எந்த விடுப்பும் எடுக்கவில்லை என்றும், அதனால் அவர் இப்போதுதான் முதல் முறையாக விடுப்பு பெற தகுதியுடையவர் என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார். எனவே, கல்வி அதிகாரியின் உத்தரவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தின் பார்வையில் தவறானது.

ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள ஒரு கூற்றை வலியுறுத்தி, குமாரி ஏற்கனவே மகப்பேறு விடுப்பு எடுத்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சௌகான், நீதிமன்றத்தின் தலையீடு தேவையில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.