இந்தியா

‘எந்தக் குழந்தையும் சாதியால் அடையாளம் காணப்படக் கூடாது’ - பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதிப் பத்தியை நீக்க இமாச்சல் அரசு உத்தரவு!

பள்ளி சேர்க்கைப் படிவத்தில் சாதிப் பத்தி நீக்கப்பட்டாலும், கல்வி உதவித்தொகை சலுகைகள் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

2027-28 கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கை படிவத்தில் உள்ள, சாதி விவரங்களை கோரும் பகுதியை நீக்கவேண்டும் என இமாச்சலப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் ஆக.26ம் தேதி நடைபெற்ற பட்டியல் சாதியினர் நல வாரியக் கூட்டத்தில் இந்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைத்து, சமூகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதே இந்த முடிவின் நோக்கம் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பள்ளி சேர்க்கைப் படிவங்களிலிருந்து சாதிப் பகுதியை நீக்குவது, குழந்தைகள் தங்கள் சாதியின் அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொள்வதைத் தடுக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.

சலுகைகள் தொடரும்

இந்த உத்தரவால் மாணவர்களுக்கான அரசு சலுகைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அரசு உறுதி அளித்துள்ளது.

சேர்க்கை படிவங்களில் சாதிப் பத்தி நீக்கப்பட்டாலும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்களின் சாதி சான்றிதழ் விவரங்களைத் தனியாகச் சமர்ப்பித்து சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.