இந்தியா

உத்தர பிரதேச தேர்தலில் புதிய வியூகம்: நீல நிற ஆடை கலாச்சாரத்தை கையில் எடுத்த அகிலேஷ் யாதவ்!

நீல நிறம் என்பது இந்தியாவின் அரசியல் களத்தில் அம்பேத்கர் கொள்கைகள் மற்றும் பகுஜன் சமாஜ் இயக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் மாணவர் அமைப்பான ‘சமாஜ்வாதி சத்ர சபா’ உறுப்பினர்களுக்கு நீல நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளுடன் கூடிய புதிய சீருடையை அவர் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்புக் தொப்பியுடன் கூடிய இந்த புதிய தோற்றம், வழக்கமான சிவப்பு மற்றும் பச்சை நிற அரசியல் அடையாளத்திலிருந்து விலகி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.

நீல நிற அரசியல்

நீல நிறம் என்பது இந்தியாவின் அரசியல் களத்தில் அம்பேத்கர் கொள்கைகள் மற்றும் பகுஜன் சமாஜ் இயக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான நிறமாக நீலம் இருந்துவரும் நிலையில், அந்த வண்ணத்தை சமாஜ்வாதி கட்சி கையில் எடுத்திருப்பது பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய அகிலேஷ் யாதவ், நீல நிறம் என்பது வெறுமனே ஒரு வண்ணம் அல்ல, அது இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் அடையாளம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஜீன்ஸ் உடை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அகிலேஷ் திட்டமிடும் ‘பிடிஏ’ வியூகம்

கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது. அதே கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாயாவதியின் ஆதரவு தளமாக விளங்கும் தலித் இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்க்க அகிலேஷ் யாதவ் இந்த புதிய உத்தியைக் கையாள்கிறார். பகுஜன் கொள்கைகளைப் பேசுவதன் மூலமும் தலித் மக்களின் அடையாளங்களைப் பிரதிபலிப்பதன் மூலமும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே தலைவராக உருவெடுக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

பாரம்பரியமான கதர் ஆடைகளுக்குப் பதிலாக நவீன டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இன்றைய Gen Z இளைஞர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் இரு வார மாணவர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவான போட்டியைக் கொடுக்கவும், 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவும் அகிலேஷ் யாதவ் வகுத்து வரும் இந்த புதிய வண்ண அரசியல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT