மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 3-வது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டுமானால், இந்த 3-வது மொழித் தேர்வின் உள் மதிப்பீட்டில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தனது புதிய சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, 2027-28 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இந்த 3-வது மொழிக்கு தனியாக வாரிய அளவிலான பொதுத்தேர்வு ஏதும் நடத்தப்படாது.
இந்தத் தேர்வு முழுமையாகப் பள்ளிகளிலேயே உள் மதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். இதில் மாணவர்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டியது அவசியமாகும்.
ஒருவேளை 10-ஆம் வகுப்பில் ஒரு மாணவர் இந்த உள் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், 10-ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, பள்ளிகள் அந்த மாணவருக்கு மறுதேர்வு நடத்தி தேர்ச்சி பெற வழிவகை செய்ய வேண்டும்.
9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விதிகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன. 9-ஆம் வகுப்பில் 3-வது மொழித் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினாலும், அவர் 10-ஆம் வகுப்பிற்குத் தகுதி உயர்த்தப்படுவார்.
இருப்பினும், அவர் 10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே, 9-ஆம் வகுப்பில் நிலுவையில் உள்ள அந்த 3-வது மொழித் தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் படி, மும்மொழிக் கொள்கையை சிபிஎஸ்இ அமல்படுத்துகிறது. மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில், குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். (உதாரணமாக: தமிழ், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்றவை). ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபிக், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் அன்னிய/இந்தியரல்லாத மொழிகளாகக் கருதப்படும்.
ஏற்கனவே 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் போன்ற அன்னிய மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து வரும் மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த மொழிகளைத் தொடரலாம், ஆனால் 3-வது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கூடுதலாகப் படிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ இந்த புதிய விதியை படிப்படியாக அமல்படுத்துகிறது. தற்போதைய கல்வியாண்டில் (2026-27) 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது. அவர்கள் தற்போதிருக்கும் இருமொழி கொள்கையின் படியே பொதுத்தேர்வு எழுதுவார்கள்.
2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கும், அவர்கள் 2027-28-இல் 10-ஆம் வகுப்புக்குச் செல்லும்போதுமே இந்த புதிய 3-வது மொழித் தேர்ச்சி விதிமுறை முழுமையாகப் பொருந்தும்.