உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசு பாதுகாப்பை கிராமப்புற பொருளாதாரத்துடனும், இயற்கை விவசாயத்துடனும் இணைக்கும் வகையில் பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்யும் புதிய முன்னோடித் திட்டத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக அம்மாநிலத்தின் புலாந்த்சகர் மாவட்டத்தில் உள்ள சியானா வட்டத்திற்குட்பட்ட நர்சேனா பகுதியில் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் (FPO) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்தும் கால்நடை வளர்ப்போரிடமிருந்தும் ஒரு லிட்டர் பசு கோமியம் 10 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது புலாந்த்சகரைச் சுற்றியுள்ள 15 கிராமங்களை உள்ளடக்கி இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கோமியத்தை எளிதாக ஒப்படைக்கும் வகையில் கிராமங்களில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறப்புச் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் மூலம் தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக 500 லிட்டர் கோமியம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோமியம் சேகரிக்கும் பணியில் கிராமப் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் சுமார் 300 பெண்கள் பங்குதாரர்களாக இணைக்கப்பட்டு, சேகரிக்கப்படும் ஒவ்வொரு லிட்டர் கோமியத்திற்கும் 2 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பால் விற்பனை மட்டுமின்றி, கோமியம் மூலமாகவும் விவசாய குடும்பங்களுக்கும் பெண்களுக்கும் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சேகரிக்கப்படும் பசு கோமியத்துடன் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டு, விவசாய நிலங்களுக்குப் பயன்படும் ரசாயனமற்ற இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் திரவக் கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் வழிவகை செய்கின்றன.
புலாந்த்சகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றி மற்றும் வரவேற்பைப் பொறுத்து, இத்திட்டம் விரைவில் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாகப் பசு கோமியத்திற்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 20 ரூபாயாக உயர்த்தவும் அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.