லிங்க்ட்இன் பதிவு 
இந்தியா

பணியில் சேர்ந்த நபர் 6 மணி நேரத்தில் ராஜினாமா.. சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய மேலாளர்

ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் 6 மணி நேரத்தில் ராஜினாமா செய்த ஊழியரால் சர்ச்சை ஏற்பட்டது.

டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர், தனது ஊழியர் பணியை விட்டு விலகுவதாக தெரிவித்ததையடுத்து, அவருக்கு பதிலாக புதிய பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி நிறுவனம்

டெல்லியில் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா என்பவர் ஹையரிங் இன்சைடர் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவரிடம் பணிபுரிந்த ஒரு ஊழியர், தான் பணியை விட்டு செல்வதாக கூறியுள்ளார்.

அப்போது நிறுவனர் ஊழியரிடம், தங்களின் பதவிக்கு வேறொரு பணியாளரை நியமித்துவிட்டு செல்லுமாறு மேலாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர், தான் வேலை பார்த்த பணிக்கு வேறு நபரை தேர்வு செய்து, அவரை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பணிக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொடுத்துள்ளார்.

மேலும் தான் புதியதாக தேர்ந்தெடுத்த நபருக்கு, நிறுவனத்தின் பணிச்சுமை, காலக்கெடு மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் முதல் நாளே கற்றுக் கொடுத்துள்ளார்.

பணி குறித்து விளக்கம்

புதியதாக வேலையில் சேர்ந்த நபரிடம், நேர்காணல் முடிந்த பிறகு, உண்மையில் பணி எப்படி இருக்கும் என்பதை அவர் பல மணி நேரமாகவும் விளக்கியுள்ளார்.

பணி குறித்து மிகைப்படுத்தாமல், உண்மையான பணி குறித்து தெளிவாக கூறியுள்ளார். இதையடுத்து புதியதாக பணியில் சேர்ந்தவர் மேல், பலவிதமான பொறுப்புகள் திடீரென திணிக்கப்பட்டதால், அந்த நபர் பதற்றமடைந்துள்ளார்.

ராஜினாமா

இதைத்தொடர்ந்து புதிதாக வேலைக்கு சேர்ந்த நபர் 6 மணி நேரம் கழித்து நிறுவனத்தின் மேலாளரிடம் சென்று தான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்ட மேலாளர் கோபமடைந்து, பழைய ஊழியரை அழைத்து, அவரிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர், நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்க சொன்ன அனைத்தையும் சென்னேன் என்று கூறியுள்ளார்.

ஒரு வேலையின் யதார்த்தத்தை பார்த்த பிறகும், புதிதாக இணைந்தவர் ஏன் பணியை விட்டு விலகினார் என்பதை நிறுவனத்தின் மேலாளரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சமூக வலைதள பதிவு

இந்த சம்பவத்தை லிங்க்ட்இன் வலைதளத்தில் பதிவிட்ட நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீவஸ்தவா, அந்த புதிய பணியாளரிடம் நிறுவனம் முதலில் வைத்த எதிர்பார்ப்புகளும், உண்மையில் அவர் செய்ய வேண்டிய வேலையும் முற்றிலும் மாறுபட்டிருந்ததாக பதிவிட்டார்.

சமூக வலைதளத்தில் நிறுவனத்தின் மேலாளர் வெளியிட்ட இந்த பதிவுக்கு, பல்வேறு பயனர்கள் பதிலளித்து கருத்து தெரிவித்தனர்.

கருத்துக்களை பதிவிட்ட பயனர்கள்

இந்த பதிவிற்கு ஒரு பயனர், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மை ஏன் முக்கியம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு வலிமையான நினைவூட்டலாகும் என பதிவிட்டார்.

மேலும், நேர்த்தியான நேர்காணல் ஒரு புதிய ஊழியரை கவரலாம், ஆனால் அந்த பணியின் உண்மைத் தன்மை தான் அவரை வேலையில் தக்க வைப்பதாக கூறினார்.

மற்றொரு நபர், ஆட்சேர்ப்பில் சொல்லப்படும் ஒரு விலை உயர்ந்த பொய் என்னவென்றால், உண்மைக்கு புறம்பான வேலை குறித்து வாக்குறுதி அளிப்பதுதான் என்று கூறினார்.

மேலும், புதிய ஊழியர் பணியில் சேரும்போது உண்மையான வேலையை குறித்து தெரிந்துகொண்டு, பணியின் செயல்முறை தோல்வியில் முடிகிறது என்று பதிவிட்டார்.

நிறுவன மேலாளர் பகிர்ந்த இந்த பதிவிற்கு, சமூக வலைதளத்தின் பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.