இந்தியா

அசாம் புதிய அரசு 12-ந்தேதி பதவியேற்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

அசாம் புதிய அரசு பதவியேற்பு தொடர்பாக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.

அசாம் மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. மட்டும் 82 இடங்களை கைப்பற்றியது. அங்கு பா.ஜ.க. ஹாட்ரிக் வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தபிஸ்வா சர்மா மற்றும் மாநில மந்திரிகள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். புதிய அரசு வருகிற 11-ந்தேதி பதவியேற்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் அசாமில் பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு வருகிற 12-ந்தேதி பதவி ஏற்கும் என்று மாநில தலைமைச் செயலாளர் ரவிக்கோடா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

அசாம் புதிய அரசு பதவியேற்பு தொடர்பாக டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று ஆய்வு நடத்தப்பட்டது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்தபிஸ்வ சர்மா தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள்.

அசாம் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. மேலிடப் பார்வையாளர்களான மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, அரியானா முதல்-மந்திரி நயாப்சிங் சைனி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் (முதல்-மந்திரி) தேர்வு செய்யப்படுவார். ஹிமந்த பிஸ்வா சர்மா மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.