இந்தியா

புதிய கட்சித் தொடங்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன்!

இளைஞர்களிடையே இருக்கும் அதிருப்தியையும், நேதாஜி மீதான ஈர்ப்பையும் வைத்து உருவாகிறது ஆசாத் ஹிந்த் கட்சி.

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் சகோதரரின் பேரரான சந்திர குமார் போஸ் இளைஞர்களை மையாக கொண்டு ‘ஆசாத் ஹிந்த் கட்சி’ என்றப் பெயரில் புதியக் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைப் பார்த்து அவருக்கு இந்த எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசாத் ஹிந்த் கட்சியானது, அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை அளிக்கும் சர்வ தர்ம சமபாவம் என்ற கொள்கையாலும், அரசியலமைப்பின் உண்மையான நெறிமுறைகளை நிலைநிறுத்துவதாலும் வழிநடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

“முற்போக்கு சிந்தனையுள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, மதச்சார்பற்ற மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், ஆசாத் ஹிந்த் கட்சியை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். நேதாஜி 1943-ல் ஆசாத் ஹிந்த் அரசை அறிவித்த தினமான அக்டோபர் 21 அன்று இக்கட்சி முறைப்படி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் - சொந்தக் கட்சி

2016-ல் பாஜகவில் இணைந்த சந்திர குமார் போஸ் சுமார் 7 வருடங்கள் அக்கட்சியில் இருந்தார். ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பை உருவாக்குவதாக பாஜக உறுதியளித்ததாலேயே இக்கட்சியில் இணைந்ததாகவும், இல்லையென்றால் இணைந்திருக்க மாட்டேன் எனக்கூறி பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.

அதனைத்தொடர்ந்து 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகினார்.

இந்நிலையில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.