NEET-UG நுழைவுத் தேர்வு, முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21 மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தேர்வு பயம் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக தமிழகம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்: வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை..
கோவை கோவைபுதூரைச் சேர்ந்த CITU டாஸ்மாக் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் பிரபுவின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, மருத்துவராகும் லட்சியத்துடன் நீட் பயிற்சி பெற்று வந்த நிலையில், ஜூன் 17 அன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது தந்தையின் மொபைல் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில், "நான் தேர்வு எழுதிவிட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்திருந்தேன், ஆனால் தேர்வு ரத்தாகிவிட்டது.
இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. அப்பா எனக்காக நிறைய பணம் செலவழித்துள்ளார்; நான் எப்படி அவர் முகத்தில் விழிப்பேன் என்று தெரியவில்லை" என உருக்கமாகக் குறிப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் மொபைலை பறிமுதல் செய்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான்: 3-வது முயற்சிக்கு முன்பாக மாணவர் மரணம்..
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் நவால்கர் பகுதியைச் சேர்ந்த, மும்பை டைல்ஸ் ஒப்பந்ததாரரின் மகனான 22 வயது உமேஷ் மாலி, தனது தாய், அக்கா மற்றும் தம்பியுடன் சிகார் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்காகப் படித்து வந்த நிலையில், போட்டித் தேர்வுகளின் கடுமையான மன அழுத்தம் காரணமாக ஜூன் 15 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன்பு 2 முறை அவர் தேர்வை எழுதியதும் தெரியவந்துள்ளது. ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் தனது 3-வது நீட் தேர்வு முயற்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
டெல்லி: பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதிய மாணவி..
டெல்லி பாலம் பகுதியில் வசித்து வந்த 19 வயது மாணவி ரேணு, மே 3 அன்று நடந்த நீட் தேர்வை எழுதியிருந்தார்.
தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதில் இருந்து கடும் அழுத்தத்தில் இருந்த ரேணு, வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஜூன் 14 அன்று போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில், தனது பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததற்கு மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
டேராடூன்: கல்லூரி டாப்பர் எடுத்த அதிர்ச்சி முடிவு..
டேராடூன் சந்திரபானி பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவி ரியா, பன்னிரண்டாம் வகுப்பில் 96.7% மதிப்பெண்கள் பெற்று கல்லூரியிலும் டாப்பராக வந்த நிலையில், படிப்பில் நினைத்த வெற்றியைப் பெற முடியாத ஏமாற்றத்தால் ஜூன் 16 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்று காலை 10:30 மணிக்கு தாய் உணவருந்த அழைத்தபோது கதவைத் திறக்காததால், கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் மீட்கப்பட்டார்; மேலும் அங்கிருந்த கடிதத்தில் "அம்மா, அப்பா, ஐ லவ் யூ" என எழுதியிருந்ததாகவும், அவரது நடத்தையில் முன்கூட்டிய மாற்றங்கள் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.