நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் நேற்று முன் தினம் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். பேரணிக்கு தடை விதித்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை தடுப்புகளை தாண்ட முயன்றவர்கள் மீது போலீசார் மற்றும் மத்திய படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர்.
இந்த போராட்டத்தில் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வந்த இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இரு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர். நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை ஷாபனா அஸ்மி உள்ளிட்டோர் அடைய குழு நேரில் சென்று மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேரணி தொடங்க உள்ள நிலையில் சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேயும் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
சோனம் வாங்சுக், தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன் என மருத்துவனையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார். மேலும் தான் நலமாக உள்ளதாகவும், பேரணியில் பங்கேற்க தன்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
பேச்சுவார்த்தை சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
சிஜேபி போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை தலைவர் ஜேபி நாட்டவை தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சிஜேபி போராட்டம் குறித்து எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி முழக்கமிட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவையில் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான மல்லிகார்ஜுன கார்கே தங்களுக்கு ஆதரவாக பேசியதற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.