கரப்பான்பூச்சி ஜனதா கட்சி  
இந்தியா

மழையில் தவிக்கும் CJP போராட்டக்காரர்கள்.. ஜூலை 20 பாராளுமன்றம் நோக்கி பேரணி - சோனம் வாங்சுக் உருக்கமான அழைப்பு

நான் போராட்டத்தைக் கைவிடுவதால் தற்கொலை செய்துகொண்ட அந்த 20 மாணவர்களுக்கு நீதி கிடைத்துவிடாது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ளது.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் 21ஆவது நாளை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சோனம் வாங்சுக்

அதேநேரம் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள லடாக் செயல்பாட்டாளர் மற்றும் விஞ்ஞானி சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவரின் உடல் எடை 7 கிலோவுக்கு மேல் குறைந்து உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் தனது போராட்டத்தை அவர் கைவிட மறுத்துள்ளார்.

உடல்நிலையைக் கருதி உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அக்கறையுடன் கூறியவர்களுக்கு பதிலளித்த சோனம் வாங்சுக்,

"எனது போராட்டத்தைக் கைவிடக் கோரி நீங்கள் அனுப்பிய அன்புச் செய்திகளுக்கு நன்றி. ஆனால், நான் போராட்டத்தைக் கைவிடுவதால் தற்கொலை செய்துகொண்ட அந்த 20 மாணவர்களுக்கு நீதி கிடைத்துவிடாது.

லடாக் மலைகளையோ, இந்தியாவின் நதிகளையோ இதனால் காப்பாற்றிவிட முடியாது."என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "நீங்கள் உண்மையிலேயே உதவ விரும்பினால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தருக்கு வாருங்கள். நாமெல்லோரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் செல்வோம்.

இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைப்போம்" என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மழை

டெல்லியில் கடுமையான மழை பெய்து வரும் நிலையிலும், போராட்டம் நடத்தும் இடத்தில் தார்ப்பாய் மூலம் கூடாரம் அமைக்க டெல்லி போலீசார் மறுப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தங்களுக்கு கூடாரம் அமைக்க அனுமதி வழங்குமாறு கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அப்ஜித் தீப்கே டெல்லி போலீசார் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.