நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) கடந்த சனிக்கிழமை டெல்லியில் போராட்டம் நடத்தியது.
இணையத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை இவ்வியக்கம் கொண்டுள்ளது.
இந்நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிரீத் திப்கே தங்களது அடுத்தகட்ட நகர்வை அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் அபிரீத் திப்கே வெளியிட்டுள்ள பதிவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடுத்த 7 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால், எங்களது அமைதியான களப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும். இது வெறும் ஆரம்பம் தான்" என்று திப்கே கூறியுள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்நாளில் முதல்முறையாக இப்போதுதான் வீதிக்கு வந்து குரல் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவின் அரசியல் களம் குறித்து தீப்கே பேசியதாவது,
"கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் முழுக்க முழுக்க இந்து - முஸ்லிம் அஜெண்டாவைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கிறது.
இந்த மத அரசியலால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவிட முடியாது.
நாட்டின் ஒட்டுமொத்த கவனமும், அரசாங்கத்தின் முன்னுரிமைகளும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை நோக்கி மாற வேண்டும்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிய பிறகு, நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறையையும் சீரமைப்பதற்கான புதிய செயல்திட்டத்தை எங்களது இயக்கம் தயாரிக்கும்.
ஜந்தர் மந்தரில் கூடிய கூட்டமும், அங்கிருந்து வெளிவந்த புகைப்படங்களுமே உண்மை என்னவென்று பேசுகின்றன.
கேள்வி கேட்கும் மாணவர்களையும், எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் 'பாகிஸ்தானியர்கள்' என்று முத்திரை குத்துவீர்கள்?
ஆளுங்கட்சியின் ஐடி செல் ஆட்கள் மட்டும்தான் இந்த நாட்டின் குடிமகன்களா?.
பிரதமர் மோடியால் ரஷியா - உக்ரைன் போரையே நிறுத்த முடிகிறது என்றால், அவரால் ஏன் இந்தியாவில் நடக்கும் வினாத்தாள் கசிவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?.
இந்தியாவில் இன்னும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு உயிர்ப்புடன் இருக்கிறது. எங்களது ஜந்தர் மந்தர் போராட்டம் முற்றிலும் அமைதியான முறையில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். எங்களது அடுத்தகட்டப் போராட்டங்கள் இன்னும் பெரிய அளவில் இருக்கும், ஆனால் அவை எப்போதும் வன்முறையற்றதாக, அமைதி வழியிலேயே நடக்கும்.
நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது முற்றிலும் ஜென் இசட் இளைஞர்களுக்கான தளம்.
எங்களை ஆதரிக்க விரும்பும் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாமே தவிர, நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அதிகாரப்பூர்வமாக எங்களை இணைத்துக் கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.