இன்று (ஜூன் 8), டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் கல்வித்துறையில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து முக்கியமான இரண்டு முடிவுகளை கூட்டணி ஒருமனதாக எடுத்துள்ளதாக அறிவித்தார்.
முதல் முக்கிய முடிவாக, இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கூட்டாகக் கடிதம் எழுத 'இந்தியா' கூட்டணி முடிவு செய்துள்ளது. "தேர்தலில் வாக்குகள் சூறையாடப்பட்டது, மக்களின் தீர்ப்பு திருடப்பட்டது மற்றும் SIR தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இந்தக் கடிதம் மிக விரைவில் தலைமை நீதிபதியிடம் நேரில் ஒப்படைக்கப்படும் என்று கார்கே தெரிவித்தார்.
கூட்டத்தின் இரண்டாவது அதிரடி முடிவாக, மத்திய கல்வி அமைச்சரின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு மற்றும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பை வீணடித்து, அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியதற்கு தார்மீகப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கார்கே மிகக் கடுமையாக வலியுறுத்தினார்.
"லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக இரவு பகலாகப் படித்து தேர்வு எழுதினர். ஆனால், இந்தத் தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்துள்ளன.
இதற்கு கல்வி அமைச்சகத்தின் அலட்சியமே காரணம். இந்தத் துரோகத்தை அரங்கேற்றிய கல்வி அமைச்சர் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை" என்று மல்லிகார்ஜுன கார்கே தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.