இந்தியா

NEET: வேதியியல், இயற்பியல் வினாத்தாளை கசியவிட்ட மருத்துவர், ஆசிரியர் கைது

நாடு முழுவதும் 49 முக்கிய இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

வினாத்தாள் கசிவு

மே 3 நடந்த இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு வினோதாள் கசிவு கண்டறியப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்த மிகப்பெரிய நெட்வொர்க் இந்த வினாத்தாள் கசிவுக்கு பின்னால் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இருந்த ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மைய நிறுவனர்கள் உட்பட பலர் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டதில் இருந்து அடுத்தடுத்து கைதுகள் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் லாதூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் புனேயைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்த வினாத்தாள் கசிவு வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

வேதியியல் வினாத்தாள்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள லாதூரைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் ஷிரூரே, RCC என்ற புகழ்பெற்ற பயிற்சி மையத்தின் நிறுவனரான சிவராஜ் மோடேகாங்கர் என்பவரின் மகன் உட்பட மூன்று மாணவர்களுக்காக வேதியியல் வினாத்தாள்களை முன்கூட்டியே பெற்றுத் தந்துள்ளார்.

நீட் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரிக்கும் முக்கியப் புள்ளியான பி.வி. குல்கர்னி என்பவருடன் தொடர்பு கொண்டு, அவர் மூலமாக இந்த வினாத்தாள்களை மருத்துவர் மனோஜ் ஷிரூரே சட்டவிரோதமாகப் பெற்றதாகச் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் லாதூரில் RCC பயிற்சி மையத்தை நடத்தி வந்த சிவராஜ் மோடேகாங்கரை சிபிஐ அண்மையில்தான் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல் வினாத்தாள்

இதே வழக்கில் புனேயில் உள்ள APMA என்ற பயிற்சி மையத்தின் இயற்பியல் ஆசிரியரான தேஜஸ் ஹர்ஷத் குமார் ஷா என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

ஆசிரியர் தேஜஸ் ஷா, இந்த வழக்கின் மற்றொரு முக்கிய பெண் குற்றவாளியான மனிஷா ஹவால்தார் என்பவரிடமிருந்து, கசிந்த இயற்பியல் வினாத்தாள்களை நேரடியாகப் பெற்று மாணவர்களுக்கு விநியோகித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை

இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் இதுவரை நாடு முழுவதும் 49 முக்கிய இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இச்சோதனைகளில் முறைகேடுகளை நிரூபிக்கும் பல ரகசிய ஆவணங்கள், லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.