இந்தியா

உயிரை மாய்த்த நீட் மாணவி.. இது தற்கொலை அல்ல; மோடி அரசின் ஊழலின் விளைவு என ராகுல் சாடல்

தேர்வு எழுத தனக்கு தைரியம் இல்லை என்று எழுதி வைத்து தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு ஜூன் 21 அறிவிக்கப்பட்டது.

சுமார் 22 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மாணவர்கள் அழுத்தத்தில் உள்ள நிலையில் சிலர் விபரீத முடிவெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆகான்ஷா சதுர்வேதி என்ற மத்திய பிரதேச மாநில இளம்பெண், மகாராஷ்டிராவின் நாக்பூரில் தங்கி நீட் பயின்று வந்த நிலையில் மீண்டும் தேர்வு எழுத தனக்கு தைரியம் இல்லை என்று எழுதி வைத்து தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஆகான்க்ஷா ஒரு மருத்துவராகி நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய விரும்பினார். அவரது தந்தை ஒரு விவசாயி. தன் மகளின் மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக, அவர் கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார்.

தனது மகள் நாக்பூரில் தங்கி நீட் தேர்வுக்கான பயிற்சிப் மையத்தில் படிப்பதற்காக, அவரே அங்கு ஒரு சமையல்காரராக வேலைக்குச் சேர்ந்தார். ஒரு தந்தையாக அவரால் என்ன செய்ய முடியுமோ, அதை அத்தனையையும் அவர் செய்தார்.

ஆனால் நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, நிச்சயமற்ற சூழலில் தள்ளி ஆகான்க்ஷாவை நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டது.

ஆகான்க்ஷாவின் மரணம் ஒரு தற்கொலை அல்ல; அது மோடி அவர்களின் ஆட்சியில் நிலவும் ஊழல் நிறைந்த, சீர்குலைந்த நிர்வாகத்தின் விளைவு.

தர்மேந்திர பிரதான் அவர்கள் இன்னும் தனது அமைச்சர் நாற்காலியில் தான் அமர்ந்திருக்கிறார். அதே கமிட்டி, அதே இடமாற்றங்கள், அதே விசாரணைகள் தான் நடக்கின்றன.

ஆனால், எந்தவொரு சீர்திருத்தமோ அல்லது நீதியோ இன்னும் கிடைக்கவில்லை.

மோடி அவர்களே, அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல; அது வரும், போகும்.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் நீங்கள் கல்வி முறையை எந்த அளவிற்கு நாசமாக்கியிருக்கிறீர்களோ, அதற்கான விலையை இந்தியாவின் ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.