நீட் (இளங்கலை) மறுதேர்வு நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
மேலும், மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்குமாறும், மருத்துவ நுழைவு தேர்வுக்கான தங்கள் படிப்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக மே 03-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.
மத்திய அமைச்சர் பிரஸ்மீட்:
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நீட் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி மீண்டும் நடைபெறும். உங்கள் அனைவர் வாயிலாகவும், நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் நம்பிக்கையுடன் இருந்து உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். மறுதேர்வு நேர்மையாகவும் முறையாகவும் நடத்தப்படும்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (NTA), மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்க முடிவு செய்துள்ளது.
தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும். இதன் மூலம் மொத்தம் 195 நிமிடங்கள் தேர்வுக்கான நேரம் கிடைக்கும். தேர்வுக்கான கால அளவு 15 நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.