நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ன்கீழ் தங்களுக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மேலும் முன்னரே வழக்குகளை கொண்டுள்ள 2,873 நபர்களுக்கு இந்த ரத்து உத்தரவு பொருந்தாது, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற மனு அளித்து, நீதிமன்றமும் அதனை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த மாபெரும் போராட்டப் பேரணியை வாபஸ் பெறுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.