இந்தியா

நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

கோவிலுக்குச் சென்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நேற்று ரத்து செய்தது. தேர்வுக்கு சில நாட்கள் முன் வினாக்கள் கசிந்தது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

தேர்வுக்கு சுமார் 45 மணி நேரத்திற்கு முன்னதாகவே வினாக்கள் கசிந்துள்ளன.

ராஜஸ்தானின் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், Guess Paper என்ற பெயரில் தனது தந்தைக்கு அனுப்பிய PDF கோப்பு மூலம் இந்த முறைகேடு முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

தேர்வு முடிந்த பிறகு, இந்த Guess Paper மற்றும் உண்மையான வினாத்தாளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே பொருந்தி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில், உளவுத்துறை தலையிட்டு ராஜஸ்தான் சிறப்பு அதிரடிப் படை மூலம் விசாரணையை தொடங்கியது. தற்போது சிபிஐ அதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தொடங்கிய இந்த கசிவு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குப் பரவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவர் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் (30). இவர் ஆயுர்வேத மருத்துவம் படித்து வரும் மாணவர் ஆவார்.

புனேவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வினாத்தாளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் Encrypted Messaging Apps மூலம் பரிமாறப்பட்டுள்ளன.

மேலும் போர்ட்டபிள் ஸ்கேனர்கள், டெலிகிராம் நெட்வொர்க்குகள் மற்றும் Shadow சர்வர்கள் மூலம் வினாத்தாள் பரப்பப்பட்டுள்ளது.

கைதில் இருந்து தப்பிக்க தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்ட சுபம், கோவிலுக்குச் சென்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கேரளா, அரியானா, ராஜஸ்தான் என பல மாநிலங்களுக்கு வினாத்தாள் பரப்பப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் 200 மாணவர்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து சிபிஐ அதிகாரிகள் கேரளா சென்று விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 15 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்த வினாத்தாள் கசிவு நெட்வொர்க்கின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட மனிஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மாண்ட்வாரியா ஆகியோரும் அடங்குவர்.