பீகாரில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான நடந்த CJP போராட்டத்திற்கு ஆதரவாக ஜூலை 25 அன்று பீகாரில், 'பீகார் பந்த்' போராட்டம் நடைபெற்றது.
இதில் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இப்போராட்டம் அன்றைய தினம் நடந்தது.
இதன்போது பல இடங்களில் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீச்சுகள் பதிவாகின. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பாக சீவானில் நடந்த போராட்டத்தில் அபிஷேக் படேல் என்ற காவலர், போராட்டக்காரர்களை நோக்கிப் பாய்ந்து சென்று மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
வைரலாகி வரும் வீடியோவில், நீல ஹெல்மெட், போலீஸ் உடுப்பு அணிந்து அபிஷேக் படேல் ஏகே 47 துப்பாக்கியால் போராட்டக்காரர்களை நோக்கி சுடுவது இடம்பெற்றுள்ளது.
வீடியோவில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே சுடப்பட்ட காட்சி இடம்பெற்றிருந்த போதிலும், குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீவான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று போராட்டக்காரர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாநிலங்களவை எம்.பி மனோஜ் குமார் ஜா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே அபிஷேக் படேல் ஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
துறை ரீதியான விசாரணை தொடங்கியுள்ளதாகவும், காவல்துறை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.