நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கடந்த சனிக்கிழமை டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிரா சாம்பாஜிநகரை சேர்ந்த அபிஜித் தீப்கே, தோற்றுவித்த இளைஞர்களுக்கான இயக்கமே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. அமேரிக்காவில் படித்து வரும் இவர் இப்போராட்டத்திற்காக இந்தியா வந்தார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில் அவர் உள்ளார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலக இக்கட்சி 7 நாட்கள் விதித்திருந்தது. மேலும் டெல்லி போராட்டம் வெறும் டிரெய்லர் தான் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சூழலில் வரும் ஜூன் 11 அன்று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "மகாராஷ்டிராவின் கல்வித் தலைநகரான புனேவில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி 'கரப்பான்பூச்சிகள்' ஒன்று கூடவுள்ளன.
எத்தனை புனே கரப்பான்பூச்சிகள் இதில் பங்கேற்கப் போகிறீர்கள்?" என்று பதிவிட்டுள்ளது.
அபிஜித் தீப்கே தனது எக்ஸ் பதிவில், "புனேவில் சந்திப்போம்; மகாராஷ்டிராவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.