நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளை பெறப்போவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது.
அசாம் அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி,
ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட 13 பேர் மீதான சட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்.
இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு எதிர்கால சட்ட நடவடிக்கையும் இல்லாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படும்.
கைது செய்யப்பட்டவர்களை விரைவாக விடுதலை செய்யும் பணிகளும், வழக்குகளைத் திரும்பப் பெறும் சட்ட நடைமுறைகளும் உடனடியாகத் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்குகளையும் ரத்து செய்து பீகார் அரசு ஏற்கனவே முழுமையான பொதுமன்னிப்பு அறிவித்திருந்தது.
ராஜஸ்தானிலும் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு எப்ஐஆரும்பதிவு செய்யப்படாது என்றும், போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.
அரசுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மத்திய அரசு மற்றும் பிற என்டிஏ ஆளும் மாநிலங்கள் சார்பிலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது மற்றும் வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்த உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்."
முன்னதாக, தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
சிஜேபி மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆகியோருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், வழக்குகளைத் திரும்பப் பெறவும், வினாத்தாள் கசிவு எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என சிஜேபி எச்சரித்திருந்த நிலையில் பீகார், அசாம், ராஜஸ்தான் அரசின் முடிவுகள் வந்துள்ளன.